மத்திய வங்கி ஊடகங்களுக்கு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநரினாலோ அல்லது மத்திய வங்கியின் ஊழியர்களினாலோ தமது தனிப்பட்ட தேவைகளுக்காக பொதுமக்களின் ஒரு சதம் கூட எடுக்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிர்வாகத்தினர் கடமை நிமிர்த்தம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணங்களின் போது அதன் செலவீனத்தை மத்திய வங்கியே பொறுப்பேற்கும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது அனைத்து நிறுவனங்களுக்கும், திணைக்களங்களுக்கும் பொதுவான விடயம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் சில வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய வலய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பு, தெற்கு-கிழக்கு ஆசிய மத்திய வங்கி ஆய்வு மற்றும் பயிற்சி மத்திய நிலையம் ஆகியவற்றினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற இருதரப்பு கூட்டங்களில் கலந்துக் கொண்டுள்ளதாகவும், பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோருடன் பல்வேறு பயணங்களில் பங்குபற்றியிருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு உத்தியோகப்பூர்வ பயணங்களுக்காக அப்போதைய மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிர்வாகத்தினர் 133.8 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்ததாக மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் நிதி ஒழுங்குகளை பாதுகாப்பற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 2015ஆம் ஆண்டு தமது உத்தியோகப்பூர்வ விஜயங்களுக்காக 96.6 மில்லியன் ரூபா நிதி மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37.2 மில்லியன் ரூபா குறைவான செலவிடப்பட்டுள்ளதை மத்திய வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
