ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறுவதாக டளஸ் அலஹப்பெரும குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்புடன் அனர்த்த நிவாரண கலந்துரையாடல் ஒன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றிருந்தது.
இக்கலந்துரையாடலில் சமூகமளித்திருந்த விமல் வீரவன்சவிடம் அவருக்கான நினைவூட்டல் கடிதமொன்றைக் கையளிக்க இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதுகுறித்து கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவிடம் விமல் வீரவன்ச மேற்கொண்ட முறையீட்டை அடுத்து குறித்த அதிகாரி திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.
எனினும் குறித்த கலந்துரையாடலின் பின்னர் இதுகுறித்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அவருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள டளஸ் அலஹப்பெரும குறித்த சம்பவத்தின் மூலம் மைத்திரி தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்தின் உயர்மட்டம் விடுத்துள்ள உத்தரவுக்கு அமைவாகவே குறித்த அதிகாரிகள் அவ்வாறு நடந்து கொள்வதாகவும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

