நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த சூழல் காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அனைவரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தியிருந்தனர்.
இதன்போது அரச நிர்வாகம் உரிய முறையில் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் மாத்திரமன்றி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் சபாநாயகர் கருஜயசூரிய தலைமை தாங்கியிருந்தார்.
கடந்த வாரம் வெசாக் தினத்தை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அரசாங்க வெசாக் வாரம் கொண்டாட்ட நிகழ்வுகளும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றிருந்தது.
அத்துடன் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்து நிவாரண நடவடிக்கைகள் தொடர்பிலும் கரு ஜயசூரிய தலைமைத்துவ வழிகாட்டலை வழங்கியிருந்தார்.
கடந்த சில மாதங்களாக வெளிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்புகளில் அரசாங்கத்தின் சார்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவே கலந்து கொள்கின்றார்.
அத்துடன் கடந்த வாரம் போரின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கான பரம வீர விபூசண விருது வழங்கல் நிகழ்விலும் சபாநாயகரே தலைமை ஏற்றிருந்தார். பொதுவாக இந்த நிகழ்வு ஜனாதிபதி அல்லது பிரதமர் தலைமையிலேயே நடைபெறுவது வழக்கமாகும்.
இவ்வாறாக தேசிய அரசாங்கத்தினுள் இருந்து அடுத்த தலைமைத்துவம் நோக்கிய பயணத்தில் கரு ஜயசூரிய தன்னைப் பலப்படுத்தி வருவதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

