அர்ஜென்டினாவில் இடதுசாரி போராளிகளை கொன்று குவித்த முன்னாள் சர்வாதிகாரி ரினால்டோ பிக்னனுக்கு 20 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் இறுதியாக சர்வாதிகார ஆட்சியாளராக இருந்த ரினால்டோ பிக்னன், 1970ஆம் ஆண்டுகளில் பதவி வகித்தார். அப்போது இவருக்கு எதிராக போராடிய இடதுசாரிகளை ‘கழுகு வேட்டை’ என்ற ரகசிய நடவடிக்கையின் மூலம் கொன்று குவித்தார்.
இதுதவிர, ஏராளமானவர்கள் உருகுவே, பிரேசில், சிலி, பராகுவே, மற்றும் பொலிவியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்பட்டு அவர்களுக்கு அங்கு பலவகையான சித்திரவதைகள் வழங்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
எனினும் பிரேசிலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ரினால்டோ பிக்னன் மற்றும் 4 முக்கியமான ராணுவ தளபதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன. குறித்த வழக்கு விசாரணை சுமார் 3 வருடங்களாக நடந்தன.
இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் சர்வாதிகாரி ரினால்டோ பிக்னனுக்கு 20 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதேவேளை, உருகுவே நாட்டின் முன்னாள் தளபதி மானுவல் கார்டெரோவுக்கு 25 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் அர்ஜென்டினாவின் ராணுவ தளபதியான ஜோர்ஜ் ரபேல் விடெலா விசாரணைகள் இடம்பெறும்பொழுது உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

