Headlines
Admin-message

ஊழலும், அநீதியும் ஸ்திரமற்ற பொருளாதார சூழலை உருவாக்கும்: ஜனாதிபதி

Published by Unknown on  | 



ஒரு புரட்சிகரமான ஆட்சி மாற்றத்துடன், பல்லின சமூக சூழலில் நல்லிணக்கத்தையும் நிலையான அபிவிருத்தி சூழலுக்கான வழியையும் ஏற்படுத்துவதில் தமது அரசாங்கம் வெற்றி கண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜப்பானில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அபிவிருத்தியடைந்த நாடுகளின் பல்தரப்பு மற்றும் இருதரப்பு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். ஒரு புரட்சிகரமான ஆட்சி மாற்றத்துடன் எனது அரசாங்கம் பல்லின சமூக சூழலில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் நிலையான அபிவிருத்தி சூழழுக்குமான வழியை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது. தற்போது எமது மக்கள் சுதந்தரமாகவும் மனித உரிமைகள் மதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளார்கள்.
நாங்கள் ஏற்படுத்திய மாற்றத்தை ஜி-7 நாடுகள் எப்படி பாராட்டின என்பதை நான் அறிவேன். இந்த மாற்றம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற இரண்டு தேர்தல்களில் மக்களினால் அங்கீகரிக்கப்பட்டது. இது ஸ்திரத்தன்மைக்கும் சுபீட்சத்திற்கும் தடையாகவுள்ள ஊழல், மோசடிகள், வீண் விரயம் போன்றவற்றுக்கான மக்களின் எதிர்ப்பை எடுத்துக்காட்டியது. இவைகள் ஸ்திரத்தன்மைக்கும் சுபீட்சத்திற்குமான முக்கிய பொறிமுறைகளான மூலதன உள்வருகையையும் முதலீடுகளையும் தாமதப்படுத்தின.
ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக நாடாளுமன்றத்திலுள்ள நாட்டின் எதிரும் புதிருமாக இருந்த இருபெரும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து எனது தலைமைத்துவத்தின் கீழ் நாம் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தோம். எமது அரசாங்கம் அரசியல்யாப்பில் 19 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்தி அதனூடாக உச்ச நீதிமன்றத்தினால் மறுக்கப்பட்ட அதிகாரங்களை தவிர்ந்த எனது ஏனைய நிறைவேற்று அதிகாரங்கள் பலவற்றை நான் நாடாளுமன்றத்திற்கு கையளித்தேன். இது ஜனநாயகத்தின் சிறந்த நடைமுறையாகும்.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் சட்ட ஆட்சி என்பவற்றிற்கான எனது அர்ப்பணத்தின் ஒரு வெளிப்பாடாகவும் ஊழலை ஒழித்துக்கட்டும் எனது உறுதிப்பாட்டின் காரணமாகவும் களவாடப்பட்ட அரச சொத்துக்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நான் ஒரு விசேட ஜனாதிபதி செயலணியைத் ஸ்தாபித்ததோடு, ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக ஒரு ஆணைக்குழுவையும் நியமித்துள்ளேன்.
மேலும் பாரிய நிதி மோசடிக் குற்றங்களை விசாரணை செய்வதற்காக பாரிய நிதி மோசடி விசாரணைப்பிரிவை பொலிஸ் திணைக்களத்தில் ஒரு விசேட பிரிவாக அமைத்துள்ளேன். ஊழலும் அநீதியும் அரசியல் வன்முறையைத் தோற்றுவிப்பதுடன் முதலீடுகள் பின்வாங்கப்படவும் ஸ்திரமற்ற பொருளாதார சூழல் உருவாவதற்கும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. எனவே எமது மேற்கூறிய நடவடிக்கைகள் ஸ்திரத்தன்மையையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தும்.
நிறைவேற்று அதிகாரங்களை கையளிப்பதற்கு மேலதிகமாக பொதுச்சேவைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, எல்லை மீள்வரைவு மற்றும் நிதி ஆகிய சுதந்திர ஆணைக்குழுக்களை மீளவும் ஸ்தாபித்துள்ளேன்.
நல்லிணக்கம் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக நான் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தொடரில் தெரிவித்தவாறு நாம் உண்மையைக் கண்டறிவதற்கும் நீதியை கண்டறிவதற்கும் எல்லா தரப்புகளுடனுமான விரிவான ஆலோசனைகளின் அடிப்படையில் கடந்தகால நிலைமைகள் மீண்டும் ஏற்பாடாதிருப்பதை உறுதி செய்வதற்கான பொறிமுறைகளை அமைத்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top