பிரேசிலில் ஜிகா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால், ரியோ டி ஜெனிரா ஒலிம்பிக் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றவோ அல்லது ஒத்தி வைக்கவோ வேண்டும் என மருத்துவர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரா நகரில் எதிர்வரும் ஆகஸ்ட மாதம் 5 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தலைசிறந்த 150 மருத்துவர்கள் அடங்கிய குழு உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், ஜிகா வைரஸ் பாதித்தால், குழந்தைகள் சிறிய தலையுடன் பிறக்கும், இளம் தலைமுறையினர் நரம்பு சம்பந்தமான நோயால் அவதிப்படுவர், இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்க பிரேசிலுக்கு சுமார் 5 லட்சம் வெளிநாட்டு பயணிகள் வர உள்ளனர்.
இதன் மூலம் ஜிகா வைரஸ் விரைவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது, இதனால் ரியோ டி ஜெனிரா நகரிலிருந்து ஒலிம்பிக்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், முடியாதபட்சத்தில் ஒத்திவைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், உலக சுகாதார நிறுவனம் ஒலிம்பிக்கை மாற்றவோ அல்லது ஒத்தி வைக்கவோ முடியாது என அறிவித்துள்ளது.

