யாழ்.கந்தரோடை பகுதியில் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு நடத்த முயன்ற குழு ஒன்று குறித்த இளைஞர் மீது கைகுண்டு தாக்குதலையும் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் கந்தரோடை- உடுவில் ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் வசித்து வருகின்ற முரளி என்பவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கும்பலொன்றால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் குறித்த நபர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் வகையில் மூன்று மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுதாக மூடிய நிலையில் ஒன்பது பேர் வந்துள்ளனர்.
குறித்த நபர் மீது மீண்டும் வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்த போது குறித்த நபர் தப்பியோட முயன்றுள்ளார். இதன் போதே அவர் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனினும் இத் தாக்குதலில் அதிஸ்டவசமாக கைக்குண்டு வெடிக்காத நிலையில் குறித்த நபர் எதுவித பாதிப்புமின்றி தப்பியுள்ளார்.
இதேவேளை இச்சம்பவத்தில் வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்காத நிலையில் அதனை மீட்பதற்கு குண்டு செயலிழக்க செய்யும் பிரிவுக்கு அறிவித்துள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

