பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலையை முன்வைத்து அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து பாரிய நிதியுதவிகளை பெற்றுக்கொள்வதாகவும் குறித்த நிதி உதவிகள் மக்களை சென்றடைகின்றதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளதெனவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கெயார் (CARE) நிறுவனத்தின் அனுசரனையுடன், மன்னார் மாந்தை மேற்கு செயலாளர் பிரிவில், நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ”மக்களை ஈடுபடுத்தலினூடாக கொள்கை மற்றும் நடைமுறை செயற்பாடுகளை உறுதிமிக்கதாக்குதல் எனும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-
”சர்வதேச நிறுவனங்களும் மற்றும் தொண்டு நிறுவனங்களும் மிகப் பெரிய நிதி ஒதுக்கீடுகளுடன், பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இவ் வேலைத்திட்டங்களில் சில எமக்கு நன்மை பயப்பனவாக இருக்கின்ற போதிலும் பல தொடர்பற்ற திட்டங்களாகவும் காணப்படுகின்றன. அத்துடன் மிகப் பெருந் தொகையான பணத்தைத் தேவையற்ற திட்டங்களுக்காகச் செலவு செய்வதன் மூலம், மக்களுக்கோ, குறித்த நிறுவனத்துக்கோ அல்லது மாகாண அரசிற்கோ அல்லது மாகாண மக்களுக்கோ அவை பிரயோசனம் அற்றதாகிவிடுகின்றன. அத்துடன் அவ்வாறான திட்டங்களை சிலர் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்.
அரசாங்கம்கூட எமது மக்களின் அவலங்களை முன்வைத்துப் பாரிய உதவிகளை வெளிநாடுகளில் இருந்து பெற்றுவருவதை நாம் காண்கின்றோம்.
ஆனால் அவையாவும் எம்மக்களுக்குப் போய் அடைகின்றதா என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது.
போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் பல தேவைகளைக் கொண்டவர்களாக, உடல், உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றனர். அவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதோடு,
அவர்களுக்கான உளவளப்படுத்தல் நிகழ்வுகள் அல்லது பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

