யாழ்.குடாநாட்டு பெண்கள் நள்ளிரவு 12 மணிக்கும் வீதியில் தனியாக நடமாடும் காலம் வரும்வரை, குற்றச்செயல்களுக்கு எதிரான தமது நடவடிக்கை தொடருமென யாழ் மேல்.நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்தார்.
யாழ்.சர்வோதய மாவட்ட அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற, சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தொடர்ந்து கூறுகையில்-
”சட்ட ஒழுங்கிற்கு கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயம், யாழ் மாவட்டத்தில் உருவாக வேண்டும். அந்த கட்டமைப்பை உருவாக்குவதற்காகத்தான், இங்குள்ள நீதிக்கட்டமைப்பு மற்றும் காவற்துறை கட்டமைப்பு என்பன இயங்கி வருகின்றன. குற்றம் செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவதன் மூலமே தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் சமூகத்தை திருத்த முடியும்.
ஒரு சமூகத்தில் மாணவர்கள் தடம்புரண்டு சென்றால் அது அந்த சமூகத்தின் அழிவாகத்தான் இருக்கும். ஆகையால் அவர்களை தவறான வழியில் போகவிட்டு முன்னேற்றம் அடைய இயலாது
.
ஐ.நாவின் நீதி மற்றும் சித்திரவதைகளுக்கான விசேட அறிக்கையாளர்கள், அண்மையில் இங்கே வந்திருந்தபோது என்னை சந்தித்து இங்கு நடைபெறும் வாள்வெட்டுக்கள் குறித்து கேட்டார்கள். என்னால் பதிலளிக்க முடியாமல் போய்விட்டது.
ஆகவே குடாநாட்டு பெண்கள் இரவு பன்னிரண்டு மணிக்கு சுதந்திரமாக நடமாடும் காலம் வரும் வரையில் எனது நடவடிக்கைகள் தொடரும்” என்றார்.

