Headlines
Admin-message

அனர்த்த நிலை குறித்து சுதந்திரக் கட்சி பராமுகம்! ஐ.தேக.களத்தில் குதிப்பு

Published by tamilkurall on  | 


நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் அனர்த்த நிலையின் மத்தியிலும் சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள் பராமுகமாக நடந்து கொண்டிருக்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள் எவரும் நிவாரண நடவடிக்கைளிலோ, பொதுமக்களின் பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதிலோ இதுவரை ஆர்வம் காட்டவில்லை.
எனினும் நாட்டின் நாலாபுறத்தில் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலன்னறுவையில் மன்னம்பிட்டி, வெலிக்கந்தை உள்ளிட்ட பிரதேசங்கள் கடுமையான வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதி அது தொடர்பில் இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அரசாங்கத்தின் சேவைகளில் முகம் காட்டி அரசியல் செய்யும் ஜனாதிபதியின் புதல்வி சதுரிக்காவும் வெள்ளத்தில் பாதிக்கப்படும் பொலன்னறுவை மக்கள் தொடர்பில் எதுவித கரிசனையும் வெளிப்படுத்தவில்லை.
எனினும் கொழும்பில் ரவி கருணாநாயக்க, சுஜீவ சேனசிங்க, கம்பஹாவில் சதுர சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, பதுளையில் ஹரின் பெர்னாண்டோ,
களுத்துறையில் ராஜித சேனாரத்ன என ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல்வாதிகள் பொதுமக்களின் துன்பங்களில் பங்கெடுத்து நெருக்கடி நிலைகளை சமாளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
களனி கங்கையின் அதிகரித்த வெள்ளப் பெருக்கு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் சதுர சேனாரத்ன எம்.பி.தனது உயிரையும் பொருட்படுத்தாது குறித்த பிரதேசங்களுக்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது பாதுகாப்புத் தரப்பினரின் தடையையும் மீறி அவர் பல இடங்களில் படகுகளில் பயணித்து வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் இராணுவத்தினருக்கு பணிப்புரைகளை வழங்கியிருந்தார்.
குருநாகலையிலும் எஸ்.பி. நாவின்ன போன்றோர் களமிறங்கி பொதுமக்களின் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அனர்த்த முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கொழும்பை விட்டு அசையாமல் மௌனம் காத்துக் கொண்டிருக்கின்றார்.
மாவட்டத்தின் சுதந்திரக் கட்சித் தலைவரான இவர், அங்குள்ள தெதுறு ஓயா கரையோர மக்களின் பாதிப்பு குறித்து எதுவித கரிசனையும் காட்டவில்லை.
அதே போன்று வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனாலும் சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளின் வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் எதுவித அக்கறையுமற்று மௌனச் சாமிகளாக பொதுமக்களின் பாதிப்புகளை பார்த்துக் கொண்டிருப்பது சிவில் சமூக அமைப்புகளின் கண்டனத்துக்கு இலக்காகியுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top