ஆனால், அந்தக் கல்வியில் வெற்றிபெறுவதற்கு அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்ற சவால்கள் எத்தனையோ.
குறிப்பாக, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை தான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது, ஆனால், அந்தப் பரீட்சையில் வெற்றி பெறுவதற்கு தாய்மொழியிலும் கணிதத்திலும் அவர்கள் சித்தியடைந்தாக வேண்டும்.
கணிதப் பாடத்தில் சித்தியடைய முடியாமல், வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகரமுடியாமல் தவிக்கும் நமது பிள்ளைகள் ஏராளம்.
அந்த பிள்ளைகளுக்கு கைகொடுக்கும் முயற்சி தான் இது.
Race for Education
தாயகத்தில் பல தசாப்தங்கள் நீண்ட போர் கொடுத்த வடுக்களை சுமந்துகொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நமது உறவுகள் நகர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
மழைவிட்டும் நிற்காத தூவானமாய், போர் ஓய்ந்தும் தீராத சமூக, பொருளாதார பிரச்சனைகளால் சிக்கித் தவிக்கிறார்கள்.
முன்னாள் போர் வலயமான வடக்கில் மட்டும் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் குடும்பங்கள் பெண்களைத் தான் நம்பியிருக்கின்றன.
இலங்கையில் தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசங்கள் தான் அதிகம் வறுமையில் சிக்கியிருப்பதை உலக வங்கியின் ஆய்வொன்று கூறுகின்றது.
வடக்கில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, கிழக்கில் மட்டக்களப்பு, மலையகத்தில் நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் தான் அதிகம் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். (முல்லைத்தீவு தான் மிகவும் வறிய மாவட்டம்)
குறிப்பாக, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வறுமையில் வாழும் மக்களில் 47 வீதமானவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.
தேசிய தொழிற்சந்தைக்குள் நுழையும் வாய்ப்புகள் போதாமை, இளைஞர்கள் மத்தியில் நிலவும் அதிகரித்த வேலைவாய்ப்பின்மை வீதம் இவை தான் வறுமையின் வீதம் இந்தளவு அதிகரிக்க காரணம்.
உலக வங்கி அறிக்கையின் படி, மலையகத்தில் 20கள் வயதுப் பருவத்தில் உள்ள பெண்களில் மூவரில் ஒருவர் போஷாக்கின்மையால் பாதிக்கப்படும் அளவுக்கு அங்கு வறுமை உள்ளது.
இந்த எல்லாப் பிரதேசங்களிலும் கல்வி வாய்ப்புகளில் உள்ள பற்றாக்குறை தான் இளைஞர்களின் தொழில்வாய்ப்புகளுக்கு முக்கிய தடைக்கல்லாக இருக்கின்றது.
குறிப்பாக, இவர்களின் உயர்கல்வி, தொழிற்சந்தை வாய்ப்புகளை பெறுவதற்கு கல்வி பொதுத் தராதர சாதாண தர பரீட்சையை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வெற்றிகொள்ள வேண்டியிருக்கிறது.
கணிதப் பாடத்தில் கட்டாய சித்தி அடைவது அந்த சவால்களில் ஒன்று.
வடக்கு மாகாணத்தில் 2014-ம் ஆண்டில் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 44 வீதமானவர்கள் கணிதத்தில் சித்தியடையவில்லை என்ற கவலைக்குரிய தகவலை கல்வி அதிகாரிகளின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது.
கிழக்கிலும் இதே நிலைமை தான். கணிதப் பாடத்தில் சித்தியடைய முடியாத பிள்ளைகள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாகிவிடுகின்றது.
இப்படியான பிள்ளைகளுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று தாயகத்தில் உள்ள கல்விச் சமூகத்தினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் எடுத்த முயற்சி தான் .......( Race for Education)
அதன் பலன்.
வடக்கில் கல்வியில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட யாழ். தீவகம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய், மடு, வவுனியா வடக்கு ஆகிய ஆறு கல்வி வலயங்களிலும் கிழக்கில் மூதூர், கல்குடா, மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு, பட்டிருப்பு, காரைதீவு ஆகிய ஆறு கல்வி வலயங்களிலும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா கல்வி வலயத்திலுமாக மொத்தம் 13 வலயங்களில் சுமார் பத்தாயிரம் மாணவர்களுக்கு உதவும் திட்டம் 2015இல் தொடங்கப்பட்டது.
இந்த சமூகப் பணிக்கு தேவையான நிதியை திரட்டும் முயற்சிகளில் பழைய மாணவர்கள் இறங்கினார்கள்.
குறிப்பாக, 92ம் ஆண்டு உயர்தரப் பிரிவின் பழைய மாணவர்கள் லண்டனில் மரதன் ஓட்டம் மூலம் சேகரித்த நிதியைக் கொண்டு கணிதப்பாடத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டன. ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் மாணவர்களுக்கு கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.
அவர்களின் தேவைகள் இத்தோடு நின்றுவிடவில்லை.
இன்னும், ஆய்வுகூட வசதிகள், மின்சாரம், நூலகம் போன்ற உட்கட்டமைப்பு தேவைகள் மட்டுமல்லாமல் குடிநீர், மலசல கூடம் போன்ற வசதிகள் கூட இல்லாமல் ஏராளமான பாடசாலைகள் அங்கு இருக்கின்றன.
அதனால், எமது உதவிக் கரம் இன்னும் நீள வேண்டிய தேவை உள்ளது.
யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் கல்விக்கான மரதன் ஓட்டம் இம்முறை உலகின் நான்கு நகரங்களில் நடக்க இருக்கின்றது.
ஒஸ்ட்ரேலியாவின் மெல்பர்ன் நகரிலும் இலங்கையில் யாழ்ப்பாணத்திலும், இங்கிலாந்தில் லண்டனிலும் கனடாவில் டொரொன்டோவிலும் ஜூலை மாத இறுதியில் (30th July 2016) எமது கல்விக்கான மரதன் ஓட்டம் நடக்கவுள்ளது.
கல்விக்கு கைகொடுக்கும் இந்த ஓட்டத்தில் உங்களையும் இணைத்துக்கொண்டு எங்களின் கரங்களை பலப்படுத்துங்கள்.

