Headlines
Admin-message

கிளிநொச்சியில் இராணுவம் வெளியேறிய காணிகளை சிலர் அபகரிக்க முயற்சி

Published by tamilkurall on  | 


கிளிநொச்சி நகரில் முகாம் அமைத்து தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த 16 ஏக்கர் நிலப்பரப்பை விட்டு இராணுவம் கடந்த வாரம் வெளியேறியுள்ளது.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அக்காணிகளில் ஏற்கனவே வசித்திராத சிலர், தமது அதிகாரச் செல்வாக்கைப் பயன்படுத்தி அபகரிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
இது சம்பந்தமான முறைப்பாடுகள் மாவட்ட அரச அதிபருக்குக் கிடைத்துள்ளமையால் அவ்விடத்தினை நேரில் சென்று பார்வையிட்ட கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,
இக்காணிகளுக்குள் எவரையும் அத்துமீறி உட்பிரவேசிக்க வேண்டாம் எனவும் காணிச் சொந்தக்காரர்கள் தமக்குரிய காணிகள் என உரிய முறைப்படி உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடன் மாத்திரமே காணிகளில் மீள்குடியேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்திருந்தார்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றக் கட்டிடத்திற்கு பின்புறமுள்ள கிளிநொச்சி நகர் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 36 குடும்பங்கள் குடியிருந்த 16 ஏக்கர் காணிகளில் கடந்த 2009ம் ஆண்டு முதல் இராணுவத்தினர் முகாம் அமைத்து தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்கள்.
இக்காணிகள் அரச காணிகளாகக் காணப்படுகின்ற போதிலும் மேற்படி காணிகளில் கடந்த 2009ம் ஆண்டு யுத்தத்திற்கு முன்னர் 36 குடும்பங்கள் நிரந்தர வீடுகளை அமைத்து பயன்தரு மரங்களை நட்டு நீண்ட காலமாக வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது இக்காணிகளை இராணுவத்தினர் விடுவித்து வெளியேறியுள்ளமையைக் கேள்விப்பட்ட காணிகளில் ஏற்கனவே குடியிருக்காத சிலர் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி அக்காணிகளை அபகரிக்கும் முயற்சியில் இறங்கி காணிகளில் வேலி அமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.
இந்நிலையிலேயே கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரால் அறிவிக்கப்பட்டு கரைச்சிப் பிரதேச செயலகத்தின் மூலம் அக்காணிகளுக்குள் எவரையும் அனுமதியின்றி உட்பிரவேசிக்க வேண்டாம் என்ற அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சிக் குளத்திற்குள் காணி பிடிக்கும் முயற்சி
மேற்படி இராணுவத்தினரால் தற்போது விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு அருகிலுள்ள கிளிநொச்சிக் குளத்திற்குரிய நிலப்பரப்பை மண்போட்டு நிரப்பி மேட்டு நிலமாக்கி அக்காணிகளில் சிலர் கட்டிடங்களை அமைத்து வருகின்றார்கள்.
குளத்தில் காணி பிடிப்பவர்களில் பலர் அதிகாரிகளாகவும் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.
கிளிநொச்சிக் குளத்தை மண்ணிட்டு நிரப்பி மேடாக்கிக் காணி அபகரிப்பது தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்களால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அவர்கள் அந்நிலப்பரப்பில் சட்டவிரோதமான முறையில் காணிக்கு மண்ணிட்டு மேடாக்கி கட்டிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்கள் எனவும் கிளிநொச்சிக் குளத்திற்குரிய நிலப்பரப்பை மண்ணிட்டு நிரப்பி மேட்டு நிலமாக்குவதால் எதிர்காலத்தில் மக்களுக்குப் பாரிய பாதிப்புக்கள் ஏற்படவுள்ளதாகவும் மக்கள் பலராலும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top