முன்னதாக, கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த நிலையில், அதனை இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி மறுத்திருந்தார்.
யாழ் ஆயரின் வேண்டுகோளின்படி கிறிஸ்தவ விவகார அமைச்சின் நிதியுதவியுடன் தேவாலயம் ஒன்றே அங்கு நிர்மாணிக்கப்படுகிறது என்றும், கடற்படை முகாம்கள் எதுவும் அங்கு அமைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது அங்கு தேவாலயம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தை இடித்து விட்டு, அங்கு புதிய தேவாலயம் கட்ட இலங்கை அரசு திட்டமிட்டு இருப்பதாக பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்தி பற்றி உங்கள் தனிப்பட்ட கவனத்துக்கு உடனடியாக கொண்டு வருவதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
இலங்கை அரசின் இந்த முயற்சி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள மீனவர்கள், கடந்த பல நூற்றாண்டுகளாக அந்த தீவுக்கு சென்று தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி வருவதற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
கச்சத்தீவில் இலங்கை அரசால் தன்னிச்சையாக புனித அந்தோணியார் ஆலயம் கட்டப்படுமானால், எதிர்காலத்தில் அந்த புனித அந்தோணியார் ஆலயத்துக்கு சென்று வழிபடும் உரிமையை தடுத்து, இடிக்கப்பட நேரிடலாம் என்று இந்திய மீனவர்கள் சந்தேகப்படுகிறார்கள். எனவே மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கச்சத்தீவில் புதிய புனித அந்தோணியார் ஆலயம் கட்டும் முன்பு தமிழ்நாட்டு மீனவர்களிடம் கலந்து பேச வேண்டும் என்று இலங்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். தமிழக மீனவர்களிடம் பேசிய பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.
மேலும் தமிழன மீனவர்களின் ஒப்புதல் பெற்ற பிறகு இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து கச்சத்தீவில் அந்தோணியார் கட்டப்பட வேண்டும் என்பதை இலங்கை அரசு ஏற்கும்படி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

