சிங்களப் பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு சம்போதி விஹாரை நிர்மாணப் பணிகள் சட்டவிரோதமானது எனவும், இந்த நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் சிங்கள ஊடகம், மனோ கணேசனிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
அவர் மேலும் கூறுகையில்…
பல இன, மத மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வரும் இலங்கையில் விரும்பிய மதத்தை வழிபாடு செய்யவோ அந்த இன, மத சமூகத்திற்கு விரும்பிய வழிபாட்டுத் தலமொன்றை அமைத்துக் கொள்ளும் உரிமைக்கோ எவராலும் தடை ஏற்படுத்த முடியாது.
எனக்கு தெரிந்த வகையில் சம்போதி விஹாரை கோகிலாய் கரையோரப்பற்று பிரதேசத்தின் சிங்கள கிராமமொன்றில் அமைந்துள்ளது.
இந்த நிர்மாணப் பணி மேற்கொள்ளப்படும் பகுதி தொடர்பில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக காணியின் உரிமையாளர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள விடயமும் எனக்குத் தெரியும். இது காணி உரிமை தொடர்பிலான பிரச்சினையாகும்.
இந்தப் பிரச்சினை சட்டத்தின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும். அவ்வாறு இன்றி வட மாகாண முதலமைச்சரோ அல்லது வேறு தரப்பினரோ இந்தப் பிரச்சினையில் தலையீடு செய்ய முடியாது என்றே நான் கருதுகின்றேன்.
அவ்வாறு நடந்தால் நமக்கு இடையில் நிலவி வரும் சமாதானம் சகவாழ்விற்கு அது அச்சுறுத்தலாக அமைந்து விடுவதனை தவிர்க்க முடியாது என அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார் என சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

