Headlines
Admin-message

தமிழ்த் தேசியம்- இரட்டை மெழுகுவர்த்தி- தமிழக அரசியல்

Published by tamilkurall on  | 

உலகெங்கும் பல கோடி தமிழர்கள் பரவி வாழ்ந்து வந்தாலும் தமிழீழம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு இடங்களில்தான் ஆதிமுதல் நிலம்சார்ந்த தமிழர்களுக்கான அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த இரு நாடுகளில் இருந்தும் பல்வேறு தேவைகள் நிமித்தம் புலம்பெயர்ந்த தமிழர்களின் குடிப்பரம்பலின் தொடர்ச்சியே இன்று தமிழன் இல்லாத நாடில்லை என்ற நிலையை தோற்றுவித்துள்ளது.
வலிமையுடன் தொடரும் ஈழத்தமிழர் ஆதரவு நிலை!
தமிழீழத்தில் சிங்கள இனவெறி அரசுகளால் காலத்திற்கு காலம் மேற்கொள்ளப்பட்டு வந்த இனவழிப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
தொப்புள்கொடி உணர்வின் வெளிப்பாடாக அமைந்த இந்த ஆதரவு நிலையானது அரசியல் தளத்திற்கும் விரிவடைந்து ஆட்சி அதிகாரத்தை மாற்றியமைக்கும் வலிமை பெற்றதாக விளங்கி வருகின்றது.
தமிழ்நாட்டில் 2011 இல் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு தி.மு.க., காங்கிரசு கூட்டணியின் உலகமகா ஊழல் உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தாலும் தமிழினப் படுகொலையில் பிரதான பங்காளர்களாக இந்த இருகட்சி கூட்டணி இருந்தமையே முக்கிய காரணமாக இருந்தது என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.
இன்றும் தமிழக அரசியலில் ஈழத்தமிழர் விடயம் செல்வாக்கு செலுத்தி வருகின்றதென்பதையே மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைந்தால் தனித் தமிழீழம் அமைவதற்கும், அங்கு தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் தொடர்ந்து பாடுபடப் போவதாக தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளதுடன், தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளமை நிரூபித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் 16 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தத்தமது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
அரசியலுக்காக தமிழக முதல்வர் ஈழம் சார்ந்த விடயத்தை பேசுவதாக சொல்பவர்களால் கூட அதே அரசியலுக்காக ஈழத்தை கைவிட்டுள்ளதன் மூலம் தம்மைத்தாமே அம்பலப்படுத்தியுள்ளார்கள்.
தமிழினத் துரோகத்தால் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர் வீழ்ச்சிகளை சந்தித்து வருகின்ற நிலையில்,
தமிழ்த்தேசிய அரசியலை முன்வைத்து அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையாக வெளியிடப்பட்டிருக்கும் நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவில் 'ஈழம் எங்கள் இனத்தின் தேசம்' என்ற தலைப்பில் ஈழத்தமிழர் விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட கோட்டை மணல் கோட்டையாக தூர்க்கப்பட்டது!
ஈழத்தில் மாபெரும் இனப்படுகொலையை நடத்த இந்தியா-சிங்களம்-சர்வதேசம் கூட்டுசதியில் ஈடுபட்டிருந்த போது, எப்படியாவது போர் நிறுத்தத்தை கொண்டுவந்து ஈழத்தமிழ் சொந்தங்களை காப்பாற்ற வேண்டும் என்ற முடிந்த முடிவுடன் அக்கினிப்பிரவேசம் செய்த 'வீரத் தமிழ் மகன்' முத்துகுமார் உள்ளிட்ட தமிழகத்து உறவுகள் கட்டியெழுப்பிய எழுச்சி நிலையை சுயநல நீர் ஊற்றி அணைத்தவர்கள் தமிழ்த்தேசிய அரசியலில் முன்னவர்களாக இருந்தவர்களே.
இதனால், தமிழ்த் தேசியத்தை முன்வைத்து கட்டியெழுப்பப்பட்டிருந்த கோட்டை மணல் கோட்டையாகி தூர்ந்துபோனதன் வெளிப்பாடுதான் ஈழத்தில் தங்குதடையின்றி அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் பெருந்துயரமாகும்.
தமிழகத்து இளையவர்களின் ஆழ்மனதில் ஈழ ஆதரவு நிலை நீறு பூத்த நெருப்பாகத் தகித்துக் கொண்டிருக்கிறது என்பதை 2013 மாணவர் எழுச்சி பறைசாற்றியது.
அப்போதும் அரசியல் வேடதாரிகள் உட்புகுந்து மடைமாற்றம் செய்தார்கள். அதன் பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக வலுக்குறைந்த முன்னெடுப்புக்களே ஈழம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
தமிழ்த் தேசிய அரசியலின் கையறு நிலையில் தோற்றுவிக்கப்பட்டதே நாம் தமிழர் கட்சி!
இந்நிலையில்தான் ஈழப்பிரச்சினையை பேசுபொருளாக்கி தமது அரசியல் முன்னெடுப்பை மேற்கொண்டுவரும் செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி உலகத்தமிழர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
தமிழர் நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும் என்ற சீமானின் முழக்கம் வெறுமனே ஆட்சி அதிகாரத்தின் மீதான அடங்காத ஆசையின் வெளிப்பாடாக பார்க்கமுடியாது.
இந்தத் தேர்தலானது நாம் தமிழர் கட்சியின் கன்னி முயற்சியென்பதும் 2021, 2026 இல் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் களமே அவர்களுக்கான அரசியல் வாய்ப்பை பரிசோதிக்கும் களமாகும் என்பதையும் சீமான் உள்ளிட்டவர்கள் நன்கு உணர்ந்தே உள்ளனர்.
அப்படியிருந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும், ஆண்டு அனுபவித்த இருபெரும் திராவிட அரசியல் சக்திகளுக்கு மத்தியில், சில பத்து ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்ற ஏனைய கட்சிகளுக்கு மத்தியில் தனித்து 234 தொகுகளிலும் போட்டியிடுவதுடன் வெற்றி தோல்விகளை கடந்து கடுமையாக பணியாற்றிவருகிறார்கள்.
செந்தமிழன் சீமான் அவர்களின் பின்னால் பேரெழுச்சியுடன் அணிதிரண்டு நிற்கும் இளைஞர்படை தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டின் வெளிப்பாடே.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நூறுபேருடன் ஈழ ஆதரவு போராட்டங்கள் நடைபெற்றுவரும் புறச்சூழலில் பல்லாயிரம் இளைஞர்களை ஈழ ஆதரவுத்தளத்தில் திரளவைக்கும் சீமான் அவர்களை விமர்சனங்கள் கடந்து ஆதரித்து பலப்படுத்துவது ஒவ்வொருவரின் கடமையாகும்.
ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட 2008, 2009 காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்கள் பின்னால் ஓடி ஓடி போராடிய சீமான் அவர்களின் இன்றைய நிலையில் சரி, தவறு என எதுவாக இருந்தாலும் அதற்கு தமிழகத்து தமிழ்தேசிய தளத்தில் முன்னவர்களாக இருந்தவர்களே முழுக்க முழுக்க காரணமாகும்.
அவரவர் அரசியல் நிலைப்பாட்டிற்குள் நின்றுகொண்டு ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் வேறுபாடுகளை காட்டிநின்றதுடன் சாதியின் பெயராலும், கட்சிகளின் பெயராலும் பிளவுபட்டு நின்றதன் வெளிப்பாடாகவே இன்றைய தமிழர் தேசத்தை தமிழர் தான் ஆழவேண்டும் என்ற தனித்தமிழ் முழக்கத்தினை முன்னிறுத்தியதான சீமானின் அரசியல் பயணம் அமைந்துள்ளது.
ஒடி ஓடி வந்தபோது இனநலனை முன்னிறுத்தி அரவணைக்கத் தவறியவர்கள் சீமானை தமது போட்டியாளராக பார்த்த இழிநிலையே அவரை தனிப்பாதையில் நடைபோடத் தூண்டியது.
அன்று அரவணைத்து தமிழ்த்தேசியத்தளத்தை வலிமைப்படுத்த தவறியவர்கள் இன்றும் குற்றம் குறைகளை தேடித்தேடி கண்டுபிடித்து விமர்சித்துவருவதன் மூலம் அதே தவறையே மீண்டும் செய்துவருகின்றார்கள்.
தமிழர் நலன்சார் வாக்குவங்கியின் சின்னமே 'இரட்டை மெழுகுவர்த்தி'!
நாம் தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தின் மீது புள்ளடியிடப்படும் ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமாகும்.
தமிழகத்தில் ஆட்சியதிகாரத்தையே மாற்றும் வலிமைபெற்று விளங்கும் ஈழத்தமிழர் விடயம் எல்லோராலும் கிள்ளுக்கீரையாக பயன்படுத்தப்படுவதற்கு காரணம் ஈழத்தமிழர் விடயம் வாக்கு வங்கியாக நிரூபிக்கப்படமையே ஆகும்.
ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை முன்னிறுத்திய தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி பெறும் வாக்குகளே தமிழக அரசியல் வரலாற்றில் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் கலை-கலாச்சாரம்-பண்பாடு சார்ந்த வாக்குவங்கியாகவும் ஈழ ஆதரவு வாக்குவங்கியாகவும் நிலைபெறும்.
தமிழக அரசியலில் ஒவ்வொரு கட்சியும் தேர்தலின் போதும் கூட்டணி பேரம் பேசுவதும், ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ மற்றக்கட்சிகளை தமது கூட்டணிக்குள் தக்கவைப்பதற்கு பேரம் பேசுவதும் அக்கட்சிகள் வைத்திருக்கும் வாக்குவங்கியின் அடிப்படையில்தானே தவிர கொள்கைசார்ந்தல்ல.
ஏழு கோடிக்கும் அதிகமான தமிழர்களைக் கொண்ட தமிழ்நாட்டில் தமிழர் நலன் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு தமிழர்களின் பலம் சாதி-மதம்-கட்சி எனப்பிரிக்கப்பட்ட வாக்குவங்கிகளாக பேனப்பட்டுவருவதே காரணமாகும்.
சாதி, மத, கட்சி அடிப்படையில் அவற்றின் நலன்களுக்கு விரோதமாக சிந்திக்கவே பயப்படும் நிலைக்கு அவைசார்ந்த வாக்குவங்கியே காரணமாக இருந்துவருகிறது.
சாதி, மதம், கட்சி ஆகியவற்றிற்கு இருக்கும் இந்தப் பாதுகாப்பு கவசம் இனம் சார்ந்ததாக மாறவேண்டும். அப்போதுதான் தமிழர் நலன்களுக்கு எதிராக சிந்திக்கவே ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் பயப்படும் நிலை உருவாகும்.
முல்லைப்பெரியார் அணை விவகாரம், காவேரி நதி நீர் விவகாரம், மீனவர் விவகாரம், கூடன்குளம் விவகாரம், மீத்தேன் விவகாரம், நியூட்றினோ விவகாரம், தாது மணல் விவகாரம், ஆற்று மணல் விவகாரம் என தமிழக மக்களின் வாழ்வுரிமை சார்ந்த விவகாரங்களிலும்,
ஈழத்தமிழர் விவகாரம், ஏழு தமிழர் விடுதலை ஆகிய உயிர் சார்ந்த விவகாரங்களிலும் தொடர்ந்தும் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதற்கு இந்நிலையே காரணமாகும்.
ஆண்ட கட்சி, மீண்டும் ஆளத்துடிக்கும் கட்சி என இரண்டு கட்சிகள் தவிர்த்து தமிழர் உரிமைகளை மீட்டெடுத்து வாழ்வை வளப்படுத்துவோம் எனக்கூறி தம்மை மாற்றுத்தலைமையாக முன்நிறுத்தி அரசியல் பிரவேசம் செய்த மற்றக்கட்சிகளும் கால ஓட்டத்தில் இந்த இரு கட்சிகளின் நிழலில் அரசியல் பயணத்தை தொடர்ந்து அவர்களின் அனைத்து செயற்பாடுகளிலும் பங்காளர்களாகியதுதான் கொடுமை.
அவ்வாறு இந்த இரு கட்சிகளுடன் காலத்திற்கு காலம் மாறி மாறி கூட்டணிசேர்ந்த இந்தக் கட்சிகள்கூட தமிழர் வாழ்வுரிமை சார்ந்த எந்த விடயத்தையும் முன்னிறுத்தி வாக்குறுதிகளைப்பெறாது தொகுதிப்பங்கீடு உள்ளிட்ட தத்தமது அரசியல் சார்ந்த விவகாரங்களையே முன்னிறுத்தி கூட்டணிசேர்வதும் பிரிவதுமாக சந்தர்பவாத அரசியலில் காலங்கடத்தி வருகிறார்கள்.
இவ்வாறாக கடந்த காலத் தேர்தல்கள் கசப்பான அனுபவங்களுடன் கடந்துபோன நிலையில் இம்முறை மாற்றம் என்ற முழக்கம் அதிகமாக எழுப்படும் தேர்தல் களமாக மாறியுள்ளது.
குழப்பகரமான கூட்டணியாக ஒட்டவைக்கப்பட்டிருக்கும் ம.ந.கூட்டணி- தே.மு.தி.க.- த.ம.க. கூட்டணி!
தமிழக மக்களின் வாவுரிமை சார்ந்த விவகாரங்கள், ஈழத்தமிழர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை விட்டுக்கொடுத்து ஒரு கூட்டணியை உருவாக்கி இரு பெரும் கட்சிகளால் கை கழுவிவிடப்பட்ட கட்சிகளையும் சேர்த்து தாம் தான் மாற்று என்று ம.ந.கூட்டணி-தே.மு.தி.க.-த.ம.க. கூட்டணி ஒருபக்கம்.
இவர்கள் மக்களுக்காகவோ கொள்கைக்காகவோ ஒன்றுசேராது முதலில் வெற்றி அதற்கு பிறகுதான் மற்றதெல்லாம் என்ற அடிப்படையில் குழப்பகரமான கூட்டணியாக ஒட்டப்பட்டுள்ளார்கள்.
சாதிய எல்லை கடந்து சிந்திக்காத பா.ம.க.!
ஆரம்பம் முதல் இந்த நொடிவரை தாம் சார்ந்த சாதி அடிப்படையிலான அரசியலை முன்னெடுத்துவரும் பா.ம.க. சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கும் அன்புமணி அவர்களும் தானே மாற்று என்று கூறிவருகின்றார்.
தமது அரசியல் நலனுக்காக சாதிய மோதல்களை திட்டமிட்டு உருவாக்கி அதில் குளிர்காய்ந்துவரும் இவர்கள் என்றுமே சாதி கடந்து சிந்தித்திருக்காதவர்கள். இன்று தாமே மாற்று என்ற முழக்கத்துடன் வருவது வேடிக்கையாகவே உள்ளது.
ஈழத்தைப் போன்ற இனம்சார் வாக்குவங்கியே தமிழர் வாழ்வுரிமையின் கவசமாகும்!
இவை ஒருபக்கம் இருக்க தமிழக அரசியலில் தமிழ்த்தேசிய வாக்குவங்கி பலப்படுத்தபட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
ஈழ அரசியலைப் பொறுத்தவரை தமிழர்களது வாக்கானது இன அடிப்படையில் ஒருமுகப்படுத்தப்பட்டு இருப்பதனால்தான் தமிழர் நிலத்தில் தமிழர் சார்ந்த கூட்டமைப்பு வாகைசூட முடிகிறது.
மத்தியில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் தமிழர் தேசத்துப் பிரதிநிதிகளாக தமிழர்களே இருக்கின்ற போதிலும் மக்களின் தெரிவானது தமது வாக்கு தம்மை தமிழ்த்தலைமை ஆளவா இல்லை தம்மை சிங்களத் தலைமை ஆளவா என்ற அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது.
அவ்வாறானதொரு நிலை தமிழகத்தில் உருவாகுவதற்கான அடித்தளமாக நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரம் அமைவதை உறுதிசெய்வதாக உங்கள் வாக்குகள் அமையட்டும்.
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள ஈழத்தமிழர் தொடர்பான விபரங்கள்...
ஈழத் தேசம், ஒன்றுபட்ட நாடாக இலங்கை மாறியதற்கு முன்பிருந்தே தமிழர்கள் ஆண்ட பூமி. தமிழுக்கும் தமிழ் மக்களுக்குமான வரலாறு சிங்களவர்களுக்கும் முன்னதானது. அப்படி வாழ்ந்த இனம் இன்று இன அழிப்பிற்கு உள்ளாகி நாடற்ற இனமாக உலகத்தாரிடம் நீதி கேட்டு நிற்கிறது என்ற முன்னுரையுடன் தொடங்குகிறது...
ஈழம் எங்கள் இனத்தின் தேசம்!
ஈழத்தில் நடைபெற்றது விடுதலைப்போராட்டம்!
அதைத்தான் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டமாக முன்னெடுத்தார்கள்.
ஈழத்தில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை!
சுதந்திர தமிழீழத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!
இந்தியாவிற்கு தமிழீழமே பாதுகாப்பு!
புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
தனித் தமிழீழ பொதுவுடமைக் குடியரசே நிரந்தரத் தீர்வாகும்.
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இதுதவிர தமிழகத்தில் ஏதிலிகளாக உள்ள ஈழத்தமிழர்களுக்கான தீர்வு குறித்து 'ஈழத்தமிழ் உறவுகளுக்கான தீர்வு' என்ற தலைப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ளது.
"வந்தவரை எல்லாம் வசதியாக வாழவைத்த தமிழினம், தன் சொந்த உறவுகளை அகதியாக வாழ வைத்திருப்பது பெருத்த அவமானம். இந்தத் துயரம் துடைத்தெறியப்படும்." என்ற முன்னுரையுடன் ஆரம்பிக்கும் பகுதியில்...
ஈழ உறவுகளின் அவலம்!
தொடரும் துயரங்கள்!
திபெத், வங்க அகதிகளுக்கு இராஜபாட்டை விரிக்கும் இந்தியா ஈழ அகதிகளை இரக்கமற்று நடத்துகிறது!
அகதிகளாக வந்தவர்களை தீவிரவாதிகள் போல் நடத்துகிறார்கள்!
ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்!
ஈழ அகதிகள் மீதான காவல்துறை கெடுபிடிகள் நீக்கப்படும்!
ஈழ உறவுகளுக்கான நல வாரியம் உருவாக்கப்படும். ஈழத் தமிழர்கள் இங்கே சிறுதொழில் செய்ய, வீடு கட்டிக்கொள்ள, திருமண உதவி பெற என்று பல்வேறு திட்டங்களுக்குத் தனியாக நிதியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.
இதுதவிர கால்நூற்றாண்டு காலமாக சட்டத்தின் பெயரால் தண்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஏழு தமிழர் விடுதலை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கால்நூற்றாண்டு காலக் கண்ணீர்ரும் கவலையும் துடைக்கப்படும் என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் ஏழுதமிழர்களையும் நாம் தமிழர் அரசு விடுதலை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
'மாற்றம் என்பது சொல் அல்ல செயல்' என்ற முழக்கத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு 49 தலைப்புகளில் மாற்றத்திற்கான வழிமுறைகள் 290 பக்கங்களில் விரிவாக குறிப்பிடப்படுள்ளது. ஈழத்தமிழ் உறவுகளுக்கான தீர்வு, ஈழம் எங்கள் இனத்தின் தேசம் என்ற இரு தலைப்புகளில் ஈழத்தமிழர் விடயம் முக்கிய இடம்பெற்றுள்ளது.
இந்த அறிக்கையை கூட சீமான் அவர்களை அரசியல் அச்சுறுத்தலாக கருதுபவர்கள் விமர்சிக்கக்கூடும். இவற்றை வெற்று அறிக்கையாகவும், வாக்குறுதிகளாகவும் கூறுபவர்களால்கூட இவ்விடயங்களை தமது தேர்தல் அறிக்கையில் இடம்பெறவைக்க முடியவில்லை.
காற்றோடு கரைந்து போய்விடும் காணல் நீராக இவ்விமர்சனங்களை காலாவதியாக்கி மே-19 இல் புதிய வரலாறு படைக்கப்படும் என்று நம்புவோம்.
'தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்'

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top