பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சி என கூறுவர்களின் செயற்பாடானது மிகவும் மோசமான செயற்பாடாகவே தாம் கருதுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றத்திற்கு பிரசன்னமாகியிருந்த நிலையில் கைகலப்பில் ஈடுபட்டமையானது கல்வி அமைச்சர் என்ற வகையில் மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
பாராளுமன்றம் என்பது மிகவும் போற்றத்தக்க அதே நேரம் கௌரவமாகவும் நடந்து கொள்ளக்கூடிய ஒரு இடமாகும்.
பாராளுமன்றத்தில் கண்ணியமாகவும் தமது சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் நடந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் தற்பொழுது பாராளுமன்ற நடவடிக்கைகள் நேரடியாக தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. எனவே முழு உலகமும் அதனை பார்த்துக் கொண்டு இருக்கின்றது.
ஒன்றிணைந்த எதிர் கட்சிகள் என்று தங்களை அறிமுகப்படுத்துகின்றவர்கள் அவர்களின் செயற்பாடுகள் காரணமாக முழு நாட்டினுடைய கௌரவத்தையும் பாதிக்கும் வகையில் நடந்து கொள்வது கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.
பாராளுமன்றத்தில் பிரதமரின் பதிலை செவிமடுக்க முடியாது மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கத் தெரியாதவர்களே இவ்வாறு நடந்து கொண்டார்கள்.
ஆனால் சம்பந்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஒரு நாளும் தனக்கு பாதுகாப்பு போதாது என பாராளுமன்றத்தில் தெரிவித்ததில்லை.
அவருடைய சகாக்களின் இந்த செயற்பாடானது முன்னாள் ஜனாதிபதிக்கும் அவப் பெயரை பெற்றுக் கொடுக்கும் ஒரு செயற்பாடாகும்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி இவர்களை தூண்டிவிட்டு இவ்வாறு செயற்பட வைக்கின்றாரோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுகின்றது.
எனவே பாராளுமன்றத்தில் கைகலப்பில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொண்டு நியாயமான ஒரு முறையில் பிரச்சினைகளை அணுக முயற்சி செய்வது சிறப்பாக இருக்கும்.
நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும் அடாவடித்தனம் மூலம் தீர்வு பெற்றுக் கொள்ள அனைவரும் முயற்சி செய்தால் நாட்டில் அமைதிக்கும் அதே நேரத்தில் தற்பொழுது நிலவும் அமைதியான சூழ்நிலைக்கும் பங்கம் ஏற்பட்டு விடும்.
எனவே இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

