நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் உள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதில், இராணுவத்துக்கு முக்கிய பங்கு இருப்பதாக அண்மையில் இலங்கை வந்திருந்த பிரித்தானிய அரசாங்கத்தினால் புதிதாக நியமிக்கப்பட்ட வதிவிடமற்ற பாதுகாப்பு ஆலோசகரான கெப்டன் ஸ்ருவார்ட் போர்லன்ட் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூனுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களுக்கு அமையவே, இலங்கையில் வதியாத பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரை நியமிக்க, இணக்கம் காணப்பட்டது.
இலங்கையின் பாதுகாப்புக் கட்டமைப்புகளை மறுசீரமைப்புச் செய்வதற்கான பிரித்தானியா வழங்கும் உதவிகளை ஒழுங்குபடுத்துவதற்காகவே, பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு, கெப்டன் ஸ்ருவார்ட் போர்லன்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் அண்மையில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் குழுவுடன் இலங்கை வந்து, பல்வேறு தரப்புகளுடனும் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இந்தப் பேச்சுக்களின் முக்கிய அம்சம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் போன்றவற்றுக்கு, பாதுகாப்புக் கட்டமைப்பின் உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பை மறுசீரமைப்புச் செய்வதேயாகும்.
இந்தப் பேச்சுக்களின் முடிவில் தான், கெப்டன் ஸ்ருவார்ட் போர்லன்ட், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விவகாரங்களில், உள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதில், இராணுவத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
முப்பதாண்டுப் போரை எதிர்கொண்ட ஒரு நாட்டின் இராணுவத்தின், தான் நினைத்த எதையும் செய்யும் அதிகாரங்களைப் பெற்றிருந்த ஒரு இராணுவத்தின் ஆதரவின்றி நல்லிணக்கத்தையோ, பொறுப்புக்கூறலையோ நிறைவேற்ற முடியாது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகப்போகின்ற நிலையிலும், இராணுவத்தை அனுசரித்தே அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை இன்னமும் முற்றுமுழுதாக நீங்கி விடவில்லை.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், புதிய அரசாங்கம், இராணுவத்தைப் பகைத்துக் கொள்ளாத வகையிலேயே செயற்படப் பார்க்கிறது.
இராணுவத்துடன் முரண்படும் ஒரு நிலையை உருவாக்கிக் கொண்டால், அது பகிரங்க மோதலாக வெடித்து விடும் என்பதால், அதற்கென ஒரு எல்லைக்கோட்டை வரைந்தே செயற்படுகிறது.
புதிய அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதால் தான், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அண்மைய மனித உரிமைகள் நடைமுறைகள் - 2015 என்ற அறிக்கையில், சிவில் அதிகாரிகளுக்கு பாதுகாப்புப்படைகள் கட்டுப்பட்டு நடக்கின்றன என்று கூறப்பட்டிருந்தது.
புதிய அரசாங்கம் சுய கட்டுப்பாட்டை விதிக்காமல் செயற்பட்டிருந்தால், இராணுவத்தின் நிலை என்னவாக இருக்கும் என்பதை கூறித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெற்ற காரணத்தினால், அவர்களுக்கு விசுவாசமான படையாகவே இராணுவம் மாறியிருந்தது.
இன்னமும் கூட இராணுவத்துக்குள் ராஜபக்சவினரின் செல்வாக்கு அதிகமாகவே இருக்கிறது.
இராணுவ அதிகாரிகள் மத்தியில், புதிய அரசாங்கம் தொடர்பாக விமர்சனங்களும் வெறுப்புகளும் இருந்தாலும் அதனை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர்.
ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இராணுவ அதிகாரிகள் தமது எல்லைகளை மீறவும் தயங்கவில்லை.
உதாரணத்துக்கு, பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்கும் ஆலோசனைச் சபையில் இரண்டு இராணுவ அதிகாரிகளையும் சேர்க்க வேண்டும் என்று, யாழ்ப்பாணத்தில் நடந்த இராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்றின் போது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் முரண்பட்டிருந்தார்,
51வது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே.அந்தச் சம்பவத்தையடுத்து, அவர் உடனடியாகவே இராணுவத் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இராணுவத்தின் கீழ்ப்படியாமையை அப்பட்டமாக வெளிக்காட்டிய சம்பவம் அது.
இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக, இராணுவத்தின் ஒன்பது மேஜர் ஜெனரல்கள், நீர்கொழும்பு விடுதி ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இரகசியமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
இராணுவ அதிகாரிகள், இவ்வாறான சந்திப்புகளை மேற்கொள்வதற்கு முன்னர், இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலாளர் போன்றவர்களின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நடைமுறையை மீறியே இவர்கள், ஜனாதிபதியைச் சந்தித்தனர்.
தமது குறைகளைப் பற்றி ஜனாதிபதியிடம் முறையிடுவதற்காக அவர்கள் அந்தச் சந்திப்பை நிகழ்த்தியிருந்தாலும், அதுகூட இராணுவ ஒழுக்க விதிமுறைகளுக்கு முரணானதாகவே பார்க்கப்பட்டது.
மிக அண்மையில், மூத்த இராணுவ அதிகாரிகள் சிலரை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக ஊடகங்களில் பரவலாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
பசில் ராஜபக்சவுடன் நீண்டகாலமாகத் தொடர்பு வைத்துள்ள மூத்த இராணுவ அதிகாரி ஒருவரின் ஏற்பாட்டிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக, கூறப்பட்டது.
இந்தச் சந்திப்பு இடம்பெற்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாவிடினும், இத்தகைய இரகசியச் சந்திப்புகளை நிகழ்த்தும் அளவுக்கு முன்னைய ஆட்சியாளர்கள் இராணுவ அதிகாரிகளுடன் இன்னமும் நெருக்கத்தைப் பேணி வருகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்த விடயங்களில் அரசாங்கத்தினால், தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் நிச்சயம் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதே பொதுவான கணிப்பீடாக இருக்கிறது.
வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில், சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கும் விவகாரத்தில் கூட, அரசாங்கத்தினால் தெளிவான முடிவை எடுக்க முடியாமல் இருப்பதற்கு, இந்த தடையே காரணமாகும்.
இராணுவத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களைப் பகைத்துக் கொண்டு காணிகளை விடுவிக்கக் கூடாது என்பதால் தான், அரசாங்கம் வலி.வடக்கு காணிகள் விடுவிப்பில் இழுபறியைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.
முப்படைகளிலும் அரசாங்கம் இந்தச் சிக்கலை எதிர்கொள்வதாகத் தெரியவில்லை. இராணுவத்துக்குள் தான் பொதுவாகவே அரசியல் தலையீடுகள் இருப்பது அதிகம். இது இலங்கையில் மாத்திரமன்றி, பொதுவாகவே எல்லா நாடுகளிலும் இதே நிலை தான் காணப்படும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தானுக்குத் திடீர் பயணம் மேற்கொண்டிருந்த போது, இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படவில்லை. விமானப்படையினரின் அணிவகுப்பு மரியாதை தான் அளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் இராணுவம், அங்குள்ள அரசியல் தலைமையின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லாமை மற்றும் நம்பிக்கையீனம் என்பனவற்றினால் தான், அணிவகுப்பு மரியாதை அளிக்கும் வாய்ப்பு விமானப்படைக்கு அளிக்கப்பட்டது.
இலங்கையில் அந்தளவுக்கு இல்லாவிட்டாலும், நூற்றுக்கு நூறு வீதம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இராணுவம் இருக்கிறது என்று கூற முடியாது.
இராணுவத்தைப் பொறுமையிழக்க விடாமல் அரசாங்கம் நாசூக்காக நடந்து கொள்வதால், இந்த விவகாரம் வெளியே தெரியவில்லை.
ஆனாலும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்று வெளிப்படையான நடவடிக்கைகளை எடுக்க முனையும் போது தான், அதன் உண்மையான முகம் தெரியவரும்.
ஏனென்றால், அத்தகைய கட்டங்களில், இராணுவத்தில் உள்ள அதிகாரிகளும் படையினரும், பொறுப்புச் சொல்ல வேண்டிய நிலையில் இருப்பார்கள்.
அத்தகையதொரு நிலைக்கு இலங்கை இராணுவத்தினர் எந்தளவுக்குத் தயார் நிலையில் இருக்கின்றனர் என்ற சந்தேகம், சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது.
அந்தக் கவலையைத் தான், பிரித்தானிய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஸ்ருவார்ட் போர்லன்ட் வெளிப்படுத்தியிருக்கிறார்.

