முன்னாள் போராளிகளை கைது செய்யும் நடவடிக்கையைக் கண்டித்து அம்பாறை நகரில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்னால் நாளை (5.5.2016) காலை 9.00 மணி தொடக்கம் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
'காணாமல் போனவர்களின் குடும்பங்களின் ஒன்றியம்' இதனை ஏற்பாடு செய்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கண்டிப்பதுடன் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
எதிர்காலங்களில் அவ்வாறான கைதுகள் இடம்பெறாதிருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்த்தில் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
அதேவேளை இவ்விடயமாக இந்த அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றொரு ஆர்ப்பாட்டம் நாளை மட்டக்களப்பு நகரில் நடைபெறவிருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது.

