Headlines
Admin-message

பிரித்தானியாவில் இடம்பெற்ற “உலகத் தமிழர் வரலாற்று மைய வளாக புகுவிழா

Published by tamilkurall on  | 


உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாக புகுவிழா நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை  பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
திரு.இன்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மூன்று மாவீரர்களின் தாயாரான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம், தமிழகத்தின் பிரபல பாடகர் திரு.டி.எல்.மகாராஜன், நாடுகடந்த தமிமீழ அரசாங்கத்தின் பிரித்தானிய அவை உறுப்பினரும் இரண்டு மாவீரர்களின் சகோதரனுமாகிய திரு.திருக்குமரன், கடற்கரும்புலி மாவீரர் காந்தரூபனின் தந்தை மற்றும் மாவீரர் சிரித்திரனின் சகோதரர் திரு.ஒப்பிலான் ஆகியோர் பொதுச்சுடர்களினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சிய கொடியினை பிரித்தானிய காவல்துறையை சேர்ந்த திரு.சுரேசும், தமிழீழ தேசியக் கொடியினை திரு சாம்ராஜ் ஏற்றி வைத்துள்ளார்.
தொடர்ந்து பொதுத் தூபிக்கான மலர் மாலையினை திருமதி பிரிகேடியர் சசிக்குமார் டிலானி அணிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து முதல் மாவீரர் லெப்டினன்ட் சத்தியநாதன் சங்கரின் திருவுருவப் படத்திற்கு அவரது தந்தை ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்தார். முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப்டினன்ட் மாலதியின் திருவுருவப் படத்திற்கு திருமதி பிரிக்கேடியர் கடாபி சுதா ஈகைச் சுடரேற்றி மலர் மாலை அணிவித்துள்ளார்.
ஈகைச்சுடர் தியாகி முத்துக்குமாரின் திருவுருவப்படத்திற்கு திரு.கபிலன் ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவிக்க, நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் திருவுருவப் படத்திற்கு திருமதி.சுகிந்திரா ஈகைச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்துள்ளார்.
பின்னர் அகவணக்கம் செலுத்தப்பட்டு அனைத்து மக்களும் மாவீரர்களின் திருவுருவப் படத்திற்கும், நினைவுக்கற்களுக்கும், பொதுத் தூபிக்கும் ஈகைச்சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தியுள்ளனர்.
மலர் வணக்கத்தை தொடர்ந்து தமிழர் வரலாற்றில் மிகப்பெரிய அத்தியாயத்தை பதிவு செய்த உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் பெயர்ப்பலகைத் திரைநீக்கத்தினை எமது எதிர்கால சிற்பிகளான சிறார்கள் வைபவ ரீதியாக திரை நீக்கம் செய்து வைத்தனர்.
பெருந்திரளான பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த நிகழ்வில், அரங்க நிகழ்வுகளாக வரவேற்பு நடனத்தினை செல்வி ஆர்த்தி, செல்வன் மிதுரன் வழங்க, வாழ்த்துரையினை இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்து சிறப்பித்த பிரபல தமிழக பாடகர் மதிப்பிற்குரிய திரு.ரி.எல்.மகாராஜன் வழங்கியுள்ளார்.
கருத்துரைகளை தமிழீழ நாடுகடந்த அரசாங்கத்தின் தற்போதைய சபாநாயகர் திருபாலச்சந்திரன், ஒக்ஸ்போர்ட் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் திரு.மயில்வாகனம் மற்றும் சோபினா ஆகியோர் நிகழ்த்தியதை அடுத்து, சிறப்புரையினை தமிழீழ வைப்பக முன்னாள் மேலாளர் திரு.பாலகிருஷ்ணன் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து, மக்கள் மத்தியில் இருந்து உலகத் தமிழர் வரலாற்று மையத்திற்கு தமது வாழ்த்துக்கள், மற்றும் வேண்டுகோள்கள் அடங்கிய வாழ்த்துமடல் ஒன்றும் உலகத் தமிழர் வரலாற்று மைய நிர்வாகிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தமிழீழ எழுச்சிப் பாடல்களை திரு.சுரேசும், மாவீரர் புகழ்பாடும் கவிதையினை கவிஞர் திரு.சிவசுப்ரமணியமும் நிகழ்த்தியுள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் கணக்கறிக்கையினை அதன் இயக்குனர் சபை உறுப்பினர் திரு.சத்தியரூபன் வாசித்தார். இறுதியாக உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நன்றியுரையினை வழங்க தமிழீழ எழுச்சி பாடலுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top