இலங்கையின் தேசிய அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு இலங்கை விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் ஆகியோருக்கு வழிகாட்டும் வகையில் “ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்கள்” ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தின் தலைமையில் இலங்கையின் விஞ்ஞானிகள், தொழில்நுட்பவியலாளர்கள், சமூக விஞ்ஞானிகள் மற்றும் கல்விமான்கள் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் “ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்கள்” உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் தம்மிக தந்திரிகொடவினால் இந்த புதிய திட்டம் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், இதன்போது தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மற்றும் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன ஆகியோரும் உடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த திட்டங்களில் ஒவ்வொரு படிமுறைக்கும் அமைவாக, அதன் துறைகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுடன் கலந்துரையாடி எதிர்கால முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி யோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன், அபிவிருத்திக்கு அப்பால் ஏற்படும் பிரச்சினைகளுக்குமான தீர்வும் இந்த திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

