சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு பொது மன்னிப்பு காலமொன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கிலிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் எதுவும் ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 25ம் திகதி முதல் இம் மாதம் 6ம் திகதி வரையில் பொதுமன்னிப்புக் காலமொன்றை அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆயுதங்களை ஒப்படைப்போருக்கு சன்மானமும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.பொது மன்னிப்பு காலத்தில் இதுவரையில் 84 ஆயுதங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்திலிருந்து ஆயுதங்கள் எதுவும் ஒப்படைக்கப்படவில்லை.கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் ஐந்து ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மற்றும் கேகாலை மாவட்டங்களில் எவ்வித ஆயுதங்களும் இதுவரையில் ஒப்படைக்கப்படவில்லை.கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் 21 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் 11 ஆயுதங்களும், புத்தளம் மாவட்டத்தில் 12 ஆயுதங்களும், கண்டி மாவட்த்தில் 6 ஆயுதங்களும், பொலனறுவை மாவட்டத்தில் 4 ஆயுதங்களும், அம்பாறை மாவட்டத்தில் 5 ஆயுதங்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 9 ஆயுதங்களும், மாத்தறை மாவட்டத்தில் 5 ஆயுதங்களும், மொனராகல் மாவட்டத்தில் 2 ஆயுதங்களும், களுத்துறை மாவட்டத்தில் 4 ஆயுதங்களும் இதுவரையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

