Headlines
Admin-message

வட மாகாண சபை முதுகெலும்புள்ள மாகாண சபையாக இயங்குகின்றது. சீனித்தம்பி யோகேஸ்வரன்

Published by tamilkurall on  | 


தமிழ் பேசும் மக்களுக்கான நிரந்தர தீர்வு வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என வட மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியது போன்று, கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு - கிரான் பகுதியில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கிராமிய கலாசார விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சா.வியாழேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று ஒரு சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தில் தமிழர்கள் பெரும்பங்கு வகித்துள்ளார்கள். அதனுடாக கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு அமைச்சுக்களையும் பிரதித் தவிசாளர் பதவியையும் பெற்று ஆட்சியில் பங்காளர்களாக உள்ளோம். 

கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சி நல்லிணக்க ஆட்சி நடைபெறுவதாக மாகாண சபையிலுள்ள பிரதான கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் கூறிக்கொண்டிருக்கிறது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். 

வடக்கு, கிழக்கினைப் பொறுத்தவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களுக்காக நீடித்து நிலைத்திருக்கக் கூடிய ஒரு சிறந்த அரசியல் தீர்வை நோக்கியே பயணித்துக் கொண்டிருக்கிறது. 

வட மாகாண சபையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி இருப்பதன் காரணமாக வடக்கு, கிழக்கு இணைந்த தாயகத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றியுள்ளார்கள். 

கிழக்கு மாகாண சபையில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்த ஆட்சி நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு இணைந்த வட, கிழக்கு மாகாணத்துக்கு சமஷ்டி ஆட்சி முறை வழங்கப்பட வேண்டும் என வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போன்று கிழக்கு மாகாண சபையும் நிறைவேற்ற வேண்டும். 

வட மாகாண சபை போன்று முதுகெலும்புள்ள மாகாண சபையாக கிழக்கு மாகாண சபை இயங்க வேண்டும். 

புதிய அரசியமைப்பு உருவாக்கும் விடயத்தில் தமிழ் - முஸ்லிம் பிரதிநிதிகள் தமது சொந்த விருப்பு வெறுப்புக்களை புறந்தள்ளி தமிழ் பேசும் சமூகம் என்ற ரீதியில் இணைந்து செயற்படவேண்டும். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் பேசும் சமூகம் இரண்டாக பிரிவதற்கு விரும்பவில்லை கடந்த காலங்களில் இரு சமூகங்களிடையே பல கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளன. இனி இவ்வாறான ஒரு சூழல் உருவாகுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. 

எமக்கு கிடைக்கின்ற அரசியல் தீர்வானது வடக்கு கிழக்கிலே வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் அமைய வேண்டும், என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top