ராஜபக்ஸ ஆட்சியில், முப்படையினருக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ய மக்கள் பணத்தை மோசடியான முறையில் கொள்ளையிட்டு வந்த தரப்பினரருக்கு தற்போதைய ஆட்சியிலும் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கடற்படையினரின் பயிற்சிகளுக்கு தேவையான ஆயுதங்களை இறக்குமதி செய்யும் விடயத்தில் தலையீடு செய்த தரப்பினர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடற்படையினருக்கான இந்த ஆயுதங்களை கொள்வனவு செய்யும் போது எந்த ஆயுத தயாரிப்பு நிறுவனத்தை சம்பந்தப்படுத்தி கொள்ளவில்லை எனவும், அதற்கு பதிலாக கடந்த காலம் முழுவதும் ஆயுத இறக்குமதியில் தலையீடுகளை மேற்கொண்டு வந்த லங்கா லொஜிக்ஸ்டிக் நிறுவனத்தையும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட இடை தரகர்களையும் சம்பந்தப்படுத்திக் கொண்டுள்ளனர்.
லங்கா லொஜிக்ஸ்டிக் நிறுவனம் என்பது முப்படையினருக்கான ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தனது தலைமையில் ஏற்படுத்திக்கொண்ட நிறுவனமாகும்.
கோத்தபாய ராஜபக்ஸவுக்கு நம்பிக்கையான மற்றும் நெருக்கமான நபர்களே இந்த நிறுவனத்தின் ஊழியர்களாக இணைத்து கொள்ளப்பட்டிருந்தனர்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும், லொஜிக்ஸ்டிக் நிறுவனத்தின் பிரதான பதவிகளில் மாற்றங்களை செய்த போதிலும் கீழ் மட்டத்தில் இன்னும் பழைய அதிகாரிகளே பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் இன்னும் இடைத்தரகு அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணி வருவதாகவும் இது குறித்து விசேடமாக கவனம் செலுத்த தவறினால், தற்போதைய அரசாங்கம் எதிர்காலத்தில் பல பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக லங்கா லொஜிக்ஸ்டிக் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றிய ஜயந்த விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகள் உட்பட 2005 ஆம் ஆண்டு மிக் விமான கொள்வனவு முதல் போர் தளபாடங்களை கொள்வனவு செய்ததில் பாரிய ஊழல், மோசடிகள் மற்றும் தரகு பணத்தை பெற்றுக்கொள்வதில் தலையீடுகளை மேற்கொண்ட பல போலியான நிறுவனங்கள் இன்னமும் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக பேசப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

