அலரி மாளிகையை கைப்பற்றுவோம் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு கொழும்பு பி.ஆர்.சீ மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
மக்களின் உரிமைகளை முடக்கும் அலரி மாளிகையை நாம் கைப்பற்றுவோம். ஜே.வி.பிக்கு அலரி மாளிகையில் அறை ஒதுக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றார்கள்.
நாம் அறைகளை மட்டுமன்றி அலரி மாளிகையையே கைப்பற்றுவோம். நிச்சயமாக நாம் அலரி மாளிகையை கைப்பற்றுவோம்.
40 சமையல்காரர்கள் அலரி மாளிகையில் இருந்தார்கள், கிரிக்கட் போட்டிகளை கண்டு களிக்க 200 அங்குல தொலைக்காட்சி, நாய்களுக்கும் ஏ.சீ. அறைகள், மினி மிருகக் காட்சிசாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் காணப்பட்டன.
மக்களின் வயிற்றில் அடித்தே இந்த சொகுசு வாழ்க்கை வாழப்பட்டது. இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட இடம் அலரி மாளிகையாகும்.
ஜே.வி.பி. எந்தக் காலத்திலும் பாதிக்கப்பட் அநீதிகளினால் பாதிக்கப்பட்ட மக்களுடனேயே இருக்கின்றது. அதனை நாம் செயற்பாடுகளின் மூலமும் உறுதி செய்துள்ளோம்.
கடந்த அரசாங்கத்தினதும் தற்போதைய அரசாங்கத்தினதும் நடவடிக்கைகளினால் மக்கள் அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.
இந்த அழுத்தங்கள் எங்கள் தலைமுறைகளுடன் நிறைவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

