இலங்கைப் பிரச்சனைக்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்ட 13வது சட்டத்திருத்தத்தின் படியே தீர்வுகாணப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.
மே மாதம் நடக்கவிருக்கும் தமிழக சட்டன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, இந்தத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வைக்கும் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று அத்தேர்தல் அறிக்கை கூறுகிறது.
இந்திய ஆதரவுடன் இலங்கை அரசியல் சாசனத்தில் உருவாக்கப்பட்ட 13ஆவது சட்டத்திருத்ததின் மூலமே அங்குள்ள தமிழ் மக்களுக்கு சம உரிமையும் வாய்ப்பும் கிடைக்கும் என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.
மும்மொழிகளைப் பயிற்றுவிக்கும் நவோதயா பள்ளிக்கூடங்களைத் துவங்க வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீடுக்கு வலியுறுத்தல், மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் ஆகியவை குறித்தும் அந்த அறிக்கை பேசுகிறது.
அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக 15,000 ரூபாயை நிர்ணயிப்பது, நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு, மெட்ரோ ரயில் திட்டத்தை மதுரை, கோவை, திருச்சி நகரங்களுக்கு விரிவுபடுத்துவது ஆகியவற்றையும் தன் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் முன்வைத்துள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென ஒரு இருக்கையை உருவாக்குவது, பூரண மதுவிலக்கு ஆகியவற்றையும் இந்தத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.

