தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தவைரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேர் மீதான வழக்கு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் மற்றும் இராணுவ புலனாய்வை சேர்ந்த எம். கலீல் ஆகியோரே இக் கொலையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களாவர்.
அதே நேரம் சிவநேசதுரை சந்திரகாந்தன் தன்னை பிணையில் செல்ல அனுமதி கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் பிணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இம் மனு மீதான விசாரணை நாளை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

