தமிழர்களுக்கான அரசியற் தீர்வு முயற்சிகளில் நிலம் மட்டுமல்ல, கடலும் தமிழர்களின் உரித்துக்குரியது என்பதனை மறந்து விடக்கூடாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தின் கடற்பகுதிகள் மீதான, சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பினால், தமிழ் மீனவர்கள் தொழில் செய்ய முடியாது, பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், ஜேர்மனியில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் ஒன்றிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜேர்மனியில் டோட்முண்ட் பகுதியில் இடம்பெற்றிருந்த இப்பொதுக் கூட்டம் நீதிக்கான வேட்கையும் அரசியற் தீர்வுக்கான பொறிமுறையும் என்ற தலைப்பில் இடம்பெற்றிருந்தது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைப் பிரதிநிதிகள், ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் சுதன்ராஜ் ஆகியோர் பங்கெடுத்து கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.
மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், தமிழர் தேசத்தின் நிலம் மட்டுமல்ல, கடலும் சிங்கள இராணுவ அரச கட்டமைப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புக்கு உள்ளான மக்களுக்கான அரசியற் தீர்வுத்திட்டகள் குறித்து பலராலும் பேசப்படுகின்றது, முன்வைக்கப்படுகின்றது.
இந்நிலையில் தமிழர்களுக்கான உரித்து என்பது நிலத்தோடு மட்டுமல்ல கடல் சார்ந்தும் உள்ளது.
தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதியினைக் கோரிவரும் நிலையில், அதற்கான பொறுப்புகூறலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் ஓர் யுக்தியாகவே புதிய அரசியலமைப்பு என்ற மாயைகளை சிங்கள தரப்பு கையாளுகின்றது.
இது குறித்து நாம் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும். இழைக்கப்பட்ட அநீதிக்கு கிடைக்கின்ற பரிகார நீதியே, தமிழர்களுக்கான அரசியற் தீர்வுக்கான வழிமுறையாக இருக்கும் என்பது மட்டுமல்ல, இன்னுமொரு இனப்படுகொலை நிகழாமலும் அதுவே தடுக்கும்.
இந்நிலையில், தமிழர்கள் அனைவரும் எமது நீதிக்கான போராட்டத்தினை பலப்படுத்துவதும், அதனை இன்னும் அனைத்துலக மயப்படுத்துவமே எமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும்.
இதனொரு அங்கமா, ஐ.நா மனித உரிமைச் சபையில் தீர்மானத்தினை மையப்படுத்தி, அனைத்துலக நிபுணர்களை உள்ளடக்கி செயற்பட்டு வருகின்ற சிறிலங்காவின் நீதிப்பொறியமைவுகளை கண்காணிக்கும் நிபுணர் குழுவின் செயற்பாடுகளை நாம் அனைவரும் பலப்படுத்த வேண்டும்.
இதேவேளை அரசியற் தீர்வுக்கான பொறிமுறையினை கூர்மைப்படுத்தும் வகையில், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டில், அதன் அரசியற் பரிமாண நீட்சியாக, பொதுசன வாக்கெடுப்பினை முன்னிறுத்த வேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரனின் உரை முக்கியத்துவப்படுத்தியிருந்தது.

