நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவிய மருத்துவர் வெற்றிடங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மாகாண சுகாதார அமைச்சர்களின் மாநாடு நேற்று நாரஹேன்பிட்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ,
இலங்கையில் தற்போதைக்கு 3800 மருத்துவர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றது. இதில் ஆயிரத்து வெற்றிடங்களுக்கான மருத்துவர் நியமனங்கள் கடந்த நாட்களில் வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய வெற்றிடங்களுக்கும் மருத்துவர்கள் மிக விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசாங்க மருத்துவமனைகளுக்கான மருத்துவர் பகிர்ந்தளிப்பில் அரச மருத்துவர்களின் சங்கம் நியாயமான முறையில் நடந்து கொள்ளவில்லை என்றும் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

