உழைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்களை வட மாகாண போக்குவரத்து,மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புத்தான் காரணமாக இருக்கின்றது. ஆனால், ஒருவர் எதற்காக உழைக்கிறார்? மகிழ்ச்சியாக வாழ்வதற்காக, ஆனால், நாள் முழுக்க உழைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி எப்படிக் கிடைக்கும்? பெரும்பாலான நிறுவனங்களில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்தான் வேலை நேரம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.
அதற்கேற்பதான் ஊதியமும் தரப்படுகின்றது. இந்த எட்டு மணி நேர வேலை என்பதும், அதற்கேற்ற ஊதியம் என்பதும் எங்கே, எப்போது, எதற்காக, எப்படி நிர்ணயிக்கப்பட்டது?
இதற்குப் பின்னே ஒரு பெரிய கதை இருக்கிறது. மிக முக்கியமான வரலாறு அது அதுதான் தொழிலாளர் தினமான மே தின வரலாறு.
1880ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் தொடங்கி, 1890ம் ஆண்டு பாரீசில் உருவானதுதான் மே தினம். அல்லது, உலகத் தொழிலாளர் தினம். அதாவது மே 1. மற்ற விடுமுறை நாட்களைப் போல இதுவும் ஒரு விடுமுறை நாள் என்று நாம் நினைத்துவிடக்கூடாது.
மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் அல்லது முதுகெலும்புகள் முற்காலத்தில் 18 மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர்.
இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை 8 மணி நேரமாக வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே மே தினம்.
எனவே இந்த மேதினத்தில் உழைப்பாளர்களாகிய நாம் அனைவரும் ஒரு விடயத்தை சிந்திக்க வேண்டும் நாம் நம்முடைய குடும்பங்களுக்காக உழைக்க ஆரம்பிக்கும் போது, நம்முடைய வீடுகள் முன்னேற்றம் அடைகின்றது, வீடுகள் முன்னேற்றம் காண்பதால் கிராமங்கள் முன்னேற்றம் காண்கின்றது, இவ்வாறு ஒவ்வொரு கிராமங்களும் முன்னேற்றம் காண்பதால் நம்முடைய மாவட்டங்கள் முன்னேற்றம் காண்கின்றது,
மாவட்டங்கள் முன்னேற்றம் காண்பதால் மாகாணங்கள் முன்னேறுகின்றது, இவ்வாறு நமது நாடு முன்னேறி முழு உலகமும் முன்னேறுகின்றது. இதற்கு ஆணிவேராக முதுகெலும்புகளாக இருப்பவர்கள் உழைப்பாளர்களாகிய நாம் ஒவ்வொருவருமே,
உலகில் பெரும் தலைவர்களுக்கு மட்டுமே சிலைகள் உருவாக்கப்படும் நிலையில் உழைக்கும் வர்க்கமாயினும், இந்த உலகையே தாங்கி தோளில் சுமக்கும் உழைப்பாளர்களுக்கான அங்கீகாரம் அது.
அத்தகைய உழைப்பாள நண்பர்களின் மகத்துவத்தைக் கொண்டாடும் நாள்தான் உழைப்பாளர் தினம் என்னும் மே தினமாகும்.
இது எல்லோருக்குமான உலகம். எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும். இந்த மே தினத்தில் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கேள்வி இது.
அனைத்து உழைப்பாள நண்பர்களுக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள்.

