தமது அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை முழுமையாக உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் ஊடாக பக்கச்சார்பற்ற மற்றும் மத்தியஸ்தமான நடவடிக்கைகளையே தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பிரதானிகளுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் சட்டத்தை பின்பற்றாத வகையில் சில ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றமை தெளிவாக தெரிவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த சட்டம் குறித்து நீதித்துறையை தெளிவூட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், குறித்த சட்டத்திலுள்ள குறைநிறைகள் குறித்து ஆராயவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், செய்திகளை வழங்கும் போது பக்கச்சார்பற்ற முறையில் செய்திகளை வழங்குமாறும் ஜனாதிபதி ஊடக நிறுவனங்களின் பிரதானிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஆட்சியாளர்கள் ஊடகங்களை பயன்படுத்திய விதத்தை தாம் நன்கறிவதாகவும், அதேபோன்று சில ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை கடந்த ஆட்சியாளர்கள் திட்டிய விதத்தை தான் நேரடியாக கண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தமது ஆட்சியின் கீழ் அவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் இடம்பெற மாட்டாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

