லக்கல பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திலுள்ள அனைத்து உத்தியோகத்தர்களிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த பொலிஸ் நிலையத்தில் சுமார் 60 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது,
லக்கல பொலிஸ் நிலையத்திலுள்ள பொலிஸ் பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யும் நோக்கில், குறித்த பொலிஸ் நிலையத்திலுள்ள அதிகாரிகள் குழுவொன்றினால் இந்த கொள்ளை திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இதுவரை நடாத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக தெரிவந்துள்ளதாக இன்று (20) வெளியாகியுள்ள பத்திரிகையொன்றில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
அத்துடன், லக்கல பொலிஸ் நிலையத்திலுள்ள இரண்டு உத்தியோகத்தர்கள் இரகசிய பொலிஸாரினால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து கடந்த 14ஆம் திகதி ரி56 ரக துப்பாக்கியொன்றும், ஐந்து கைத்துப்பாக்கிகளும் கொள்ளையிடப்பட்டிருந்ததுடன், அந்த துப்பாக்கிகள் சில தினங்களுக்கு பின்னர் விஹாரையொன்றின் வளாகத்திலுள்ள நீர்தாங்கியொன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

