இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்கமைப்பதற்கான சுயாதீன ஒளிபரப்பு அதிகார சபையை ஸ்தாபிப்பது தொடர்பாக ஊடகத்துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாண தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 17 தொலைக்காட்சி அலைவரிசைகளும், 47 வானொலி அலைவரிசைகளும் செயற்படுகின்றமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அலைவரிசைகளை ஒழுக்கமைப்பதற்கான அதிகார சபை பிரித்தானியாவின் ஊடக அதிகார சபையின் கட்டமைப்பின் முறைமைக்கு அமைய ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான உறுப்பினர்களை சேர்த்துக்கொள்கின்ற போது சுயாதீனமாக இயங்கக்கூடிய வகையிலான செயற்திட்டம் ஒன்றும் பின்பற்றப்படவுள்ளதாகவும், தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டமூலத்தை தயாரித்த பின்னர், சுயாதீன அதிகார சபையை அமைப்பதற்கு அவசியமான வரையறைகள் வகுக்கப்படும் எனவும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறான அதிகாரசபையொன்று ஸ்தாபிக்கப்படும் பட்சத்தில் ஊடகத்துறை சார்ந்த பல விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என ஊடகத்துறை மாற்றுக்கட்டமைப்பு செயலகத்தின் தலைவர் பிரதீப் என் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

