முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைப் பழிவாங்கும் நோக்கிலேயே தனது அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலிமாவட்ட, எல்பிட்டிய தொகுதியின் அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க செயற்பட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட அமைப்பாளர் நியமனத்தின்போது அவரது அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டு, இணை அமைப்பாளர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஊடகமொன்று கருத்து வினவிய போது ,
தனது அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டமையானது தன்னைப் பழிவாங்குவதைக் காட்டிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைப் பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட கீதா குமாரசிங்க,
மஹிந்த ராஜபக்சவுக்கு பெருகி வரும் பொதுமக்கள் ஆதரவு கண்டு அரசாங்கம் அதிர்ச்சியடைந்துள்ளது.
இதன் காரணமாகவே என்னுடைய அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டு, தேர்தலில் வெல்ல முடியாதவர்களுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மே தினத்தன்று கிருலப்பனையில் நடைபெறும் கூட்டத்திற்கே நான் செல்லவுள்ளேன்.
அமைப்பாளர் பதவியைப் பறித்து எங்களை அச்சுறுத்த முயன்றாலும் மஹிந்தவுக்கு ஆதரவாக நாங்கள் செயற்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

