இலங்கை அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்குமாறும், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தங்கச்சிடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை இன்றைய தினம் முன்னெடுத்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500ற்கும் அதிகமான மீனவ குடும்ப அங்கத்துவர்கள் பங்குப்பற்றியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
படகுகள் மற்றும் மீனவர்களை மீட்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா மற்றும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற வேட்பாளர் மணிகண்டன் ஆகியோர் அங்கு பிரசன்னமாகியுள்ளனர்.
மீனவர்களின் பிரச்சினை குறித்து கடந்த ஐந்து வருடங்களாக எந்தவித தீர்வையும் பெற்றுக் கொடுக்காத நிலையில், தற்போது மாத்திரம் அரசியல்வாதிகள் தம்மை நாடி வருவதாக தெரிவித்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.இதன்போது கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
வாக்குவாதம் வலுவடைந்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜாவின் காரை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்துள்ளனர்.
இதையடுத்து அடையாள உண்ணாவிரத போராட்டம் இடம்பெற்ற இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து பொலிஸாரின் தலையீட்டின் நிலைமை வழமைக்கு கொண்டு வரப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்





