ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி - 7 மாநாட்டில்கலந்துகொண்டு மீண்டும் நாடு திரும்பிய பின்னர் தற்போதைய அமைச்சரவையில் நிச்சயமாக மாற்றங்கள் ஏற்படும் என்று அரசின் தகவலறிந்த வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.
ஜி - 7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 11ஆம் திகதி ஜப்பானுக்குச் செல்லும் ஜனாதிபதி 15ஆம் திகதி நாடு திரும்புவார் எனவும், அதனைத் தொடர்ந்து மே 21ஆம் திகதியின் பின்னர் தற்போதைய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் எனவும் அவ்வாட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சரவை மாற்றங்களைத் தொடர்ந்து மாகாணசபை அமைச்சுகளிலும் அதிரடி மாற்றங்கள் வரலாம் எனவும் கூறப்படுகின்றது.
அத்துடன், அரச நிறுவனங்களின் விசேடமாக அரச ஊடக நிறுவனங்களின் தலைமைப் பதவிகளிலும் ஒரு சில மாற்றங்கள் இடம்பெறலாம் எனவும் அவ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

